புதன், 22 டிசம்பர், 2010

இன்பம் மீளுமா

குளிர்நிலவும் தரு நிழலும்
இன்பம் பயக்கலாம்!
குழலும் குயிலும் அதன் இசையும்
அமுதம் படைக்கலாம்!
குழந்தையின் மழலை அதனினும்
இனிக்கலாம்!
உற்றதுணை மாந்தர் மண்ணை விட்டு
போனபின்னே
அத்தனையும் சுகம் கொடுக்குமோ !

நாணம்

சாளரத்தின் கதவுகளில் அவளது கண்ண உரசல்கள் !
பூமித்தாயின் பரப்பின் மீது அவளின் புள்ளி வைக்கப்படாத கோலங்கள் !
இவையாவும் அவளின் காதல் பரிணாமத்தின் போது ! 

                                    அறித்யா அறிவழகன் ., 

தியானம்

சிறகுகள் தேவையில்லை நீ
 மேகமாய் மாறும்போதில்!
நீச்சல் கற்கத் தேவையில்லை நீ
 மரக்கலமாய் மாறும்போதில்!
பரம்பொருளைத் தேடவேண்டியதில்லை நீ
உன் வெளியை உணரும்போதில்!

ஞாயிறு, 14 நவம்பர், 2010

அம்மாவுக்கு

தாய் மடியே தலையணையிலும்
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
 
                                       
                                          அறித்யா அறிவழகன்

சிறு புன்னகையில்


சிறு புன்னகையில் உதிரும் பூக்களைத்தான்
நான் சிறகாய் எண்ணியுள்ளேன்!
என் கண்மணியே உன் விழி உவர் மழை தான்
நம் காதலை காட்டுதடி !
பேரிகை முழக்கமெல்லாம் சத்தம் என்பதுதான்
உந்தன் உதட்டில் பிறந்தடி !
கவலையும் கஷ்டமெல்லாம் பெரும் காயம் என்பதில்லை
கானல் நீராகுமடி !
 
                                                                                  அறித்யா அறிவழகன்

வருணனை

 
இந்திர சௌந்தரி
அன்பினில் நிரந்தரி
ஆசை காதலி
வதன மோகினி
மதுர சோதி நீ
நித்தில இசை நீ
சுவர்க்க பூமி நீ
சுவையினில் மாங்கனி
சுவைத்த பின் தேன் துளி
சுந்தர வதனி
பெண்டுலமாவதுன் காதணி
பஞ்சனை நெஞ்சினில்
தவழ்ந்திடும் கழுத்தணி
உலவும் தென்றலில்
ஊஞ்சலாடும் உன் குழலடி
பாவை உன் நெற்றியில்
சந்திர ஒளியடி
ஊறிய தேனில்
நீந்திடும் இதழடி
வைரத்தை கூர்ப்பாக்கும்
உந்தன் விழியடி
மாவினை எடுப்பதும்
கோலமிடுவதும் மங்கையர் தொழிலடி
உன் பூவிதழ் விரலால்
மாவினை தொடுவதே
கோலாகலம் தானடி
வேல்விழி தலைவி
வேலவர் புதல்வி
காதல் நாயகி
காண்பவர் வியந்திடும்
காந்தார எழிலினி
கஜமுகன் துணையும்
குரு திருவருளும்
என்றும் உனக்கடி

 அறித்யா அறிவழகன்

வாழ்த்து

வம்பளத்த கிளிகள் எல்லாம் வாழ்த்தி உமை பேசட்டும் !
கொடியிருக்கும் பூக்கள் எல்லாம் அங்கிருந்தே மனம் வீசட்டும் !
சலசலத்த நதிகள் எல்லாம் சப்தமின்றி ஓடட்டும் !
ரீங்கார வண்டுகள் மூங்கிலினுள் பாய்ந்து இசைக்கட்டும் !
புள்ளின மான்களெல்லாம் துள்ளி வந்து தாளம் போடட்டும் !
தித்திக்கும் தேன்பாகாய் கீதங்கள் உமை வாழ்த்தட்டும் !
இனிமையான இந்நாளில் எல்லா வளமும் வேலவன் தந்தருளட்டும் !
கனிவான குரலில் அங்கே என்னவளும் சேர்ந்து வாழ்த்துகிறாள் !
வையகம் போற்றிட வாழ்வாங்கு வாழ!

 அறித்யா அறிவழகன்

அவா

 
இளைப்பாருவோமா இரவின் மடியிலே 
தாலாட்டு பாடச் சொல்லலாமா தென்றலை
குளிர் சுனை நீர்க்குளத்தில் கல் வீசி
அதிர்வலைகளை கைதொட்டு உரசிபார்ப்போமா
செஞ்சாற்று குழம்பெடுத்து மங்கையர்
கால் படச்செய்யலாமா
வேம்பின் கரத்திருந்து தவழ்ந்து வரும்
இலையின் மிதவோட்டம் கண்டு செல்லலாமா
தென்னங்கீற்றின் ஓலையாட்டத்தை
பண்ணமைத்து இசை போடலாமா
ஆற்றின் நீரோட்டத்தில் துள்ளிடும்
மீனினத்தை கண்கொண்டு பேசலாமா
கதிர் முற்றி அறுவடைக்கு காத்திருக்கும்
பயிர் மேனி தொட்டு உணரலாமா
இரை கண்டு உறைவிடம் செல்லும்
மைனாவை வழிமறித்து பேசலாமா
தங்கையின் பிஞ்சு கரம் பிடித்து
பள்ளித்தலம் நோக்கி  நடக்கும்
சிருவனைக்கைசாடை செய்யலாமா
கொவ்வை இலை பறித்து கற்பலகை ஒடுபூசி
தமிழ் எழுத்தைப் பதிக்கலாமா
தமிழ்த்தாய் வாழ்த்தினையே உணர்வுகொண்டு
உரத்திச் சொல்லி பாடலாமா
அவாவுடன்

அறித்யா அறிவழகன்

திங்கள், 25 அக்டோபர், 2010

புலம்பல்

பின்தங்கியுள்ளது இந்த ஊர் !
இல்லை மதுபானக்கடை!
புலம்பல் குடிகாரர்!

சாதீ(தி)

எங்கள் ஊரில் இந்தத்தீ மட்டும்
அணைவதில்லை!
அணைக்கச் சென்றால் வெந்து போகிறேன் !
மூட்யவர்களோ குளிர் காய்கிறார்கள் !   

கொடி(மரம்)

பயத்தில் கொடி மரம்!

நேற்று நான் இ(ற)ருந்த இடத்தில்
உன்னைப் புதைக்கிறார்கள்!

தீபாவளி

ஐப்பசியில் தீபாவளி
ஆனந்தத்தின் பேரொளி
வண்ணப்பட்டு புத்தாடைகளின் பட்டொளி
சின்னஞ் சிறார்ப் பறவைகளின்
கண்களில் மின்னொளி
காத்திருந்து கைகோர்க்கும்
காதலர்களின் சரச ஒலி
புதுமண தம்பதிகளுக்கோர்
புதுவாழ்வில் புத்தொளி
கன்றிளம் காளையர்கள் தேனருந்த ஒன்றுகூடும்
வண்டினத்தின் சாயலொலி
எண்ணில்லா மின்மினிபூக்கள்
மத்தாப்பினுள்லிருந்து குதிக்கும் வெள்ளொளி
மீச்சிறு மீயொலிகள் கோடிகளின் மடங்கில்
பட்டாசாய் ஒலிக்கும் சப்த ஒலி
ஆண்டு முழுதும் காணாத இனிப்ப்புகள்
கவர்ந்திழுக்கும் காந்தஒலி
என்சோட்டு இளையர்களே உங்களுக்கு
அன்பனின் வாழ்த்தொலி
தீபாவளி இன்பத் தீபாவளி
ஏதுமுண்டோ இணையான சங்கொலி

வெள்ளி, 22 அக்டோபர், 2010

மழலை

உன் உச்சி முகர்தலில் !
பட்டுடல் ஸ்பரிசிக்கையில் !
பொக்கை வாய்ப் புன்னகையில்!
தாத்தாவின் மறுபிறவி இவன்
எனும்போது!
பிறர் உன் வார்ப்படம் எனும் போது!
எல்லா கனங்களும் கரைந்து லேசாகி
பறப்பது போன்ற உணர்வு !
ஆண் மகவு பெற்ற மமதையில் அப்பாவுக்கு!